Saturday, May 26, 2012

City of God-(2002)-கேங்ஸ் ஆப் பிரேசில் -15+

ஒரு நாட்டின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள ரெண்டு வழிகள் உள்ளன, ஒன்று நீங்கள் அந்த நாட்டிற்கு பயணம் செய்து அந்த நாட்டின் கலாச்சாரத்தை, வாழ்க்கைமுறையை அறிந்து கொள்ளலாம், அல்லது நீங்கள் அந்த நாட்டின் திரைப்படங்களை பார்க்கலாம் - யாரோ சொன்னது !!!!!
     
திரைபடங்கள் நமக்கு என்ன வாழ்க்கைமுறையை கற்று தர போகின்றது என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் பார்க்க வேண்டிய படம் "City of God-(2002)" a.k.a: Cidade de Deus. உங்கள் சந்தேகம் போயே போய் விடும். பிரேசில் என்றால் நமக்கு உடனே ஞாபகம் வருவது மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த புட் பால் விளையாட்டு வீரர்கள், சம்பா நடனம் மற்றும் பெரிய ஜீசஸ் சிலை தான். அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைமுறையை நாம் அறிந்திருக்க வாய்ப்பு ரொம்பவே குறைவு. இந்த படம் முலமாக நீங்கள் பிரேசில் நாட்டின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கைமுறையை அறிந்து கொள்ள முடியும்.எனக்கு பிரேசில் என்றால் இனி மேல் இந்த படமும் ஞாபகம் வரும்.
City of God பிரேசில் நாட்டின் தலைநகரமான ரியோ டி ஜெனிரோ அருகில் உள்ள ஒரு சேரி பகுதி. அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் தொகுப்பே இப்படம். அந்த சேரியில் நிறைந்து இருப்பது வன்முறை மற்றும் அதீத வன்முறை மட்டுமே. அது மட்டும் அல்லாது போதை மருந்து கும்பல், அவர்கள் செய்யும் கொலை, கொள்ளை என்று அந்த சேரியே வாழ தகுதியற்ற இடமாக மாறி கொண்டு வருகிறது. இந்த மாதிரி அசாதாரணமான சூழ்நிலையில் அந்த சேரியில் பின்புலத்தில் இருந்து வந்து, சிறந்த போட்டோக்ராப்பர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் ராக்கெட் (Rocket) என்ற இளைஞன் தனக்கும் City of God-க்கு இருக்கும் பந்தத்தை நமக்கு விவரிக்கும் கதையே இந்த படம். சும்மா சொல்ல கூடாது, இந்த படத்துல யாரும் நடிச்ச மாதிரி எனக்கு தெரியவில்லை, எல்லாம் அந்த அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பார்கள்
படத்தில் முதல் காட்சியில் City of God நகரின் மைய பகுதியில் ஒரு தாதா கேங், தங்கள் மதிய உணவிற்கு சிக்கன் சமைத்து கொண்டு இருப்பார்கள். அங்கு நிற்கும் ஒரு கோழி மரண பயத்துடன் மற்ற கோழிகள் சிக்கன் ஆவதை பார்த்து கொண்டு இருக்கும். பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று, தன் கட்டை தானே அவிழ்த்து கொண்டு தப்பித்து ஓடும். நம்ப ஊருல ஹீரோயின் கோழி தப்பிச்சி போச்சுனா அதை பிடிச்சு தர நம்ப ஹீரோ இருப்பாரு. கோழி பிடிக்கிற சாக்குல அவரு ஹீரோயின பிடிப்பாரு !! காதல் வரும், இது சராசரி சினிமா.. ஆனா நம்ப பார்கிறது உலக சினிமா. இங்க தப்பிச்ச கோழிய பிடிக்க அந்த தாதா கும்பலின் மொத்த பேரும் துப்பாக்கிய தூக்கிகிட்டு ஓடுவாங்க. சும்மா கிடையாதுங்க சுட்டுகிட்டே ஓடுவாங்க. எல்லாம் பத்து வயசுல இருந்து இருபது வயசுக்குள்ள தான் அந்த தாதா கேங் ஆளுங்க இருப்பாங்க. ஓடுற கோழி படத்தோட கதைசொல்லி ராக்கெட் பாகத்துல வந்து நிக்கும். அந்த கும்பலின் தலைவன் பேரு லில்' ஜே (Lil' Ze), வெறும் இருபது வயசு தான் இருக்கும். ஜே மற்றும் ராக்கெட் சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். ஜே ராக்கெட்கிட்ட அந்த கோழிய பிடிக்க சொல்லுவாரு. ராக்கெட் கோழி பிடிக்க ரெடி ஆவான். கரெக்டா அந்த நேரம் பார்த்து மொத்த போலீஸ் குரூப் தாதா லில்' ஜே கும்பலை உயிரோடு அல்லது பிணமாக பிடிக்க அன்புச்செல்வன் IPS மாதிரி விறப்பா வந்து சேருவாங்க. இந்த பக்கம் போலீஸ் படை, அந்த பக்கம் லில்' ஜே படை, நடுவுல ராக்கெட் & கோழி. இங்க இருந்து பிளாஷ்பேக்....... ராக்கெட் தன்னோட கடந்த காலத்தை பற்றியும் லில்' ஜேவை பற்றியும் மற்றும் அந்த சேரியில் வாழ்ந்த அனைவரை பற்றியும் நமக்கு கதை சொல்லுவார்.
ROCKET
கதை முதலில் 60's பயணம் செய்யும். இங்கு நாம் City of God-யின் ஆரம்ப நாட்களை பார்போம். ராக்கெட் மற்றும் லில்' ஜே சிறுவனாக இருப்பார்கள். லில்' ஜேவின் மற்றும் ஒரு நண்பனின் பெயர் பென்னி(Benny). அங்கு டெண்டர் ட்ரையோ (Tender Trio) என்ற முன்று பேர் கொண்ட கேங் சிறு, சிறு கொள்ளைகள் செய்து கொண்டு இருப்பார்கள். டெண்டர் ட்ரையோ கேங்கில் எப்படியாவது தங்களையும் சேர்த்து கொள்ள சிறுவர்கள் லில்' ஜே & பென்னி அந்த முன்று பேரை கெஞ்சி கொண்டு இருப்பார்கள். இப்படியாக 60's கதை பயணம் செய்யும். கதை முடிவில் ட்ரையோ கேங் மெம்பர்ஸ் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள்.
அடுத்து கதை 70's-க்கு நகரும். அங்கு ராக்கெட் பள்ளிக்கு செல்லும் வாலிபனாக வளர்ந்து இருப்பான். லில்' ஜே மற்றும் பென்னி அந்த நகரத்தில் பெரிய போதை மருந்து டீல்ர்ஸ் ஆக வளர்ந்து இருப்பார்கள். தங்கள் பாதையில் யார் வந்தாலும் போட்டு தள்ளிட்டு போய் கொண்டே இருப்பார்கள். அவர்களின் பிரதான எதிரி கேங் கேரட்(Carrot). பென்னி அனைவரையும் அனுசரித்து செல்லும் பொறுமைசாலி, லில்' ஜே அவனுக்கு நேர் எதிர். பொறுமை என்பதே கிடையாது. அனைவரிடமும் சண்டை போடும் கேரக்டர். ஒரு டான்ஸ் பார்ட்டியில் கேரடின் ஆள் தவறுதலாக லில்' ஜேவை சுடுவதற்கு பதில் பென்னியை சுட்டு கொன்று விடுவான். அதை பார்த்த லில்' ஜே வெறி கொண்டு, தன் நண்பனை கொன்ற கேரட் கேங்யை பழி வாங்க புறப்பட்டு விடுவான். இங்கு இருந்து கேங் வார் ஆரம்பிக்கும். இங்கு இருந்து 80's ஆரம்பிக்கும்.
இந்த கேங் வாரின் இறுதி தான் நாம் பார்த்த முதல் காட்சி.......

Children Shooting
படத்தில் சுவாரிசியங்கள் சில:

  • படம் நான்-லீனியர் பாணியில் சொல்ல பட்டு இருக்கும். ஆனால் நமக்கு குழப்பம் இல்லாமல் திரைக்கதை புரியும்.
  • படத்தில் ராக்கெட் கதை சொல்லும் விதம் புதுமையாக இருக்கும். ஒரு கதை அல்லது சம்பவம் என்று ராக்கெட் விவரிக்க ஆரம்பித்தால், கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று நம்மால் யூகிக்கவே முடியாது. எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று விடும் கதை. ஒரு கதாபாத்திரத்தை பற்றி சொல்லும் போது அந்த கதாபாத்திரத்தில் வரலாறு, புவியல், மற்றும் பூகோளம் போன்ற அணைத்து விசயங்களும் புட்டு புட்டு வைக்க படும். உ.தா: போதை மருந்து விற்க படும் ஒரு அப்பார்ட்மெண்ட் அறையை காட்டி, போன தலைமுறையில் அந்த அறையில் யார் முதலில் தங்கி இருந்தார்கள், அவர்களிடம் இருந்து யார் யாருக்கு அந்த அறை கை மாறியது, தற்பொழுது அந்த அறையில் யார் உள்ளார்கள் என்று அணைத்து விசயங்களும் நமக்கு விளக்க படும்.
  • படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் மிகவும் தந்துருபமாக படமாக்க பட்டு இருக்கும். ஒரு காட்சிகளில் 10 வயது சிறுவன் ஒருவனிடம் லில்' ஜே துப்பாக்கியை குடுத்து வேறு ஒரு 8 வயது சிறுவனை கொல்ல சொல்லும் காட்சி நம்மை உலுக்கி விடும்..8 வயது சிறுவனின் கண்ணில் தெரியும் உயிர் பயம் மற்றும் 10 வயது சிறுவன் தான் கொலை செய்ய வேண்டுமா என்று கண்ணில் மிரட்சியும் பயமும் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் காட்சி....யப்பா....கிரேட் ஆக்டிங் !!!
  • இறுதி காட்சி தான் படத்தின் அடிநாதமே. சினிமா தனம் இல்லாமல் மிகவும் எதார்த்தமான காட்சி அது.
  • இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட படம். படம் இறுதியில் நிஜ வாழ்வில் வாழ்ந்த கதாபாத்திரங்களின் படங்களை காட்டுவார்கள்.
இந்த படம் கட்டாயம் தவற விட கூடாத படம். கொஞ்சம் வன்முறை ஜாஸ்தி.அதீத வன்முறை காரணமாக இப்படம் 15+ வயதினற்கு மட்டுமே உகந்தது

My Rating: 9.2/10 .... Must watch..!


29 comments:

  1. நிறைய நாட்களாக பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் படம். நண்பன் ஒருவனும் படத்தைப் பார்த்துவிட்டு ரெகமண்ட் பண்ணியிருந்தான். சீக்கிரம் பார்த்துவிடுகிறேன்.

    அடிக்கடி சொன்னாலும் நல்ல படமா அறிமுகப்படுத்துறீங்க. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க பாஸ்...உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
      சும்மா காட்டு காட்டி விட்டது இந்த படம்...

      Delete
  2. City of god பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்... ஆனால் இதுவரை பார்த்ததில்லை... கதையை படிக்கும்போது ஆரண்ய காண்டம் நினைவுக்கு வருகிறது...

    ReplyDelete
    Replies
    1. பிரபா,
      நான் இன்னும் ஆரண்ய காண்டம் பார்க்க வில்லை. தனுஷின் புதுபேட்டை படத்தை City of god படத்துடன் நிறைய பேர் compare செய்து பார்த்து உள்ளேன். என்னை பொறுத்த வரை City of god-க்கும் புதுபேட்டைக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. இரண்டுமே வெவேறு தளத்தில் பயணிக்கும் படம்...
      வருகைக்கு நன்றி :)

      Delete
    2. புதுப்பேட்டை அல்ல. வட சென்னை.

      Delete
  3. நல்ல விமர்சனம் பாஸ், படம் பத்தி முன்னமே கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா எதார்த்தமான கதைன்னு தெரியாது.. கண்டிப்பாக பார்க்கிறேன்.நன்றி!

    ReplyDelete
  4. அண்மையில்தான் இந்த படம் பார்த்தேன்.. இதை படம் என்று நினைக்கவே முடியவில்லை.. அவ்வளவு தத்ரூபம்.. நீங்கள் சொல்லியது போல் கதை ஒவ்வொரு காலகட்டமாக நகரும்.. சில இடங்களை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இரண்டாவது தடவையாக பார்த்தே தெளிவு பெற்றேன்.. உங்கள் அருமையான விமர்சனம் இன்னும் தெளிவாக்கி விட்டது.. அதில் நடித்த அத்தனை சிறுவர்களும் அசத்திவிட்டார்கள்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே. இந்த படத்தில் நடித்தவர்கள் ஒருவரை(கேரட்) தவிர யாருமே தொழில் முறை நடிகர்கள் கிடையாது.. இருந்தாலும் தொழில் முறை நடிகர்களை விட மிக சிறப்பாக நடித்து இருப்பார்கள்.
      வருகைக்கு மிக்க நன்றி :)

      Delete
  5. ராஜ்..இப்படத்தை பார்த்து தமிழில் பல படங்கள் வந்தது.
    புதுப்பேட்டை இப்படத்தின் இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்ட படம்தான்.
    செல்வராகவன் எப்போதுமே ஜெராக்ஸ் எடுக்க மாட்டார்.
    கருவை மட்டும் எடுத்துக்கொண்டு நம் இந்திய சூழலுக்கு ஏற்றவாறு திரைக்கதையை மாற்றி அமைத்து விடுவதில் வல்லவர்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே... இரண்டு படங்களிலும் கேங்ஸ்டர் வாழ்கையை பற்றி சொல்லி இருப்பார்கள். எப்படி ஒரு கேங்ஸ்டர் உருவாகிறான் என்று மிக நேர்த்தியாக சொல்லி இருப்பார்கள்

      Delete
  6. நீங்க பன்றதுதான் சரியான விமர்சனம் .....கீப் இட் அப்.........வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி பாஸ்...

      Delete
  7. Some one said its lik puthuppettai...

    ReplyDelete
    Replies
    1. Both movies speak about how a Gangstar is formed. Other than that there is no resemembalnces btw Pudupettai and City of God..Both are totally different..
      Thx for visiting my blog :)

      Delete
  8. Awesome movie watched more than 5 times. Thanks for ur review

    ReplyDelete
  9. இரண்டு மூன்று நாட்களாக பிளாக்கர் பக்கம் சரியா வர டைம் கிடைக்கல.தாமதமான பின்னூட்டத்துக்கு நண்பர் என்னை மன்னிக்கவும்.

    படத்தை டவுன்லோடு பண்ணி டிவிடியிலும் பேர்ன் பண்ணி ரொம்ப நாளா ஆகுது பாஸ்..இன்னும் பார்க்கவில்லை.இப்படத்தை பற்றிய நிறைய நல்ல விமர்சனங்களை படித்திருக்கிறேன்.நல்ல விமர்சனம் தங்களது.படம் பற்றிய விவரிப்புகளும் அதை வெளிப்படுத்திய எழுத்து நடையும் அருமை/

    படம் இப்பக் கூட என் முன்னாடிதான் இருக்கு பாஸ்..இப்ப டைம் இல்ல.விரைவில் பார்த்துடுறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. கண்டிப்பா பாருங்க நண்பா..

    ReplyDelete
  11. தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் ,2006 ஆண்டு என்று நினைக்கிறன்,நிறைய gangster படங்கள் வந்தது.
    ஆரியா நடித்த "பட்டியல் " படம் இந்த "city of god" பாதிப்பில் இருந்ததாக அந்த நேரத்தில் சொல்லப்பட்டது.
    இதுவரை பார்கவில்லை.நிச்சயம் பார்கிறேன்.பார்த்துவிட்டு உங்களுக்கு சொல்கிறேன்.

    ReplyDelete
  12. நல்ல திரைப்படம், விமர்சனம் மிக அருமை.
    நீங்க படிபவர்களுக்கு ஏற்றவாறு புரியும்படி கதையை எழுதி இருபது அழகு.

    ReplyDelete
  13. இப்போதுதான் உங்கள் பக்கத்திற்கு வருகிறேன். நிறைய நல்ல உலகப் படங்களை அறிமுகம் செய்கிறீர்கள், வாழ்த்துகள்! இந்த படத்தை கூடிய விரைவில் பார்த்து விடுகிறேன்.. நான் சமிபத்தில்தான் 'தி ஷஷாங்க் ரிடம்சன்' படத்தைப் பார்த்தேன்.. நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி கார்த்தி, நீங்களும் அடிக்கடி எழுதுங்கள்...
      "தி ஷஷாங்க் ரிடம்சன்" One of my Favourite Movie..நிறைய முறை பார்த்து உள்ளேன்..

      Delete
  14. நல்ல விமர்சனம்.:) நீங்கள் கூறியது போல் இப்படத்திற்கும் புதுபேட்டைக்கும் சம்பந்தம் இல்லை என சொல்ல முடியாது. இரண்டும் தத்தம் சமூகத்தின் வன்முறை தோய்ந்த மனங்களை, அவற்றின் சுயநலத்தை இச்சைகளை தொடர்சம்பவங்களின் மூலம் பின்தொடரும் படங்கள். மற்றபடி புதுப்பேட்டை சிட்டி ஆஃப் காடுடன் ஒப்பிடக்கூடிய படம் தானேயொழிய நிச்சயம் நகல் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே...

      Delete
  15. நான் உங்க வலைபூ பக்கம் வருவதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகிவிட்டது. தாமதத்திற்கு மன்னிப்பு கேட்கிறேன்.

    My Rating: 9.8/10 .... Must watch..!!!!

    முதன் முறையாக ஒரு திரைப்படத்திற்கு ஒருவர் இத்தனை அதிகமான மதிப்பெண்கள் கொடுத்து நான் பார்கிறேன். தாராளமான மதிபெண்களுக்குப் பின்னால் இருக்கும் தரம் அதனை நீங்கள் விமர்சனம் செய்த விதம் அனைத்தும் அருமை. உங்கள் விமர்சனம் சன் டிவியில் திரை விமர்சனம் கேட்பது போலவே இருந்த்தது. அருமை வாழ்த்துக்கள்.

    நான் லீனியர் கதைகளும் திரைப் படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும், கண்டிப்பாக இந்தப் படம் பார்கிறேன். எக்ஸாம் படம் உங்கள் விமர்சனம் படித்த பின்பு தான் படித்தேன். அருமையான படம். ஒரே ஒரு அறைக்குள் நகரும் கதை என்றாலும் சலிப்பு தட்டாமல் செல்லும் படம்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,
      நட்பில் எதுக்கு மன்னிப்பு எல்லாம்.. :)
      இந்த படம் IMDB யில் வாங்கிய மதிப்பெண் 8.7. சிறந்த பட வரிசையில் #18 வது இடத்தில உள்ளது...
      படம் பார்த்து முடிந்தஉடன் இந்த படத்தின் தாக்கம் குறைய கண்டிப்பாய் ரெண்டு நாட்கள் ஆகும்.. கண்டிப்பாய் பாருங்கள்..Subtitles உடன் தான் பார்க்க வேண்டும்,ஏன் என்றல் இது Portuguese மொழி படம்.. :)

      Delete
    2. கண்டிப்பாக நண்பா தங்கள் ஆணை அப்படியே செய்கிறேன்

      Delete
  16. தனுசின் புதுபேட்டை கிட்டதட்ட இதன் தழுவல் போல தான்.. கடந்த வருடம் பார்த்தேன்.. நல்ல படம்..


    உங்கள் வலைப்பூவை என் வலைப்பூவில் இந்த வார நண்பர் பகுதியில் பகிர்ந்துள்ளேன்.. மறுப்பு ஏதும் இருந்தால் கூறவும்.. நன்றி அண்ணா..

    ReplyDelete
  17. மிக அழகாக எழுத்தப்பட்ட விமர்சனம். லில்' ஜே வின் சிறுவயதிலிருந்தே வெளிப்படும் கொடூரத்தை பார்த்தாலே நடுங்கும்!

    ReplyDelete
  18. I like this Movie very Much. Awesome Making. Nice Review Raj. Thanks for Sharing.

    ReplyDelete